;
Athirady Tamil News

கைலாசா என்றொரு நாடு இல்லை! நித்தியானந்தா எங்கே?

0

கைலாசா நாட்டை உருவாக்குவதற்காக பழங்குடியினரை ஏமாற்றி அமேசான் வனப் பகுதியை வாங்கியதாக நித்தியானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரையும் இந்தியா, சீனா உள்ளிட்ட அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய பொலிவியா அரசு, உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக 2019 ஆம் ஆண்டு இந்தியா அறிவித்தது.

அதன்பிறகு, இந்தியாவைவிட்டு தப்பிச் சென்ற நித்தியானந்த சில நாள்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை ஹிந்துக்களுக்காக உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து, கைலாசா நாட்டுக்கென தனிக் கொடி, அமைச்சரவை, இணையதளம், நாணயம், ரிசர்வ் வங்கி என வரிசையாக அறிவிப்புகளையும் விடியோக்களையும் வெளியிட்டார்.

கைலாசா என்பது போலி நாடு என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டின் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தி, குடியேறுவதற்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஐ.நா., அமெரிக்காவில் கைலாசா

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை கூட்டத்தில் கைலாசா நாட்டின் நிரந்தரத் தூதா் எனக் கூறி விஜயபிரியா நித்தியானந்தா என்பவா் பங்கேற்ற விடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

தொண்டு அமைப்புகள், மக்கள் என யாராக இருந்தாலும் குறிப்பிட்ட இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்று தகவலைப் பதிவு செய்யலாம். ஆனால், கைலாசா நாடு சாா்பில் அவா்கள் பேசிய உரை ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஐ.நா. விளக்கம் அளித்தது.

இதனிடையே, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் நிர்வாகத்துடன் கைலாசா தரப்பில் ஒப்பந்தம் கையெழுத்தான சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

அதேபோல், கைலாசாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததற்காக பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சகத்தில் பணியாற்றிய அா்னால்டோ சமோரா என்ற அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அமேசான் வனத்தை வாங்க முயற்சி

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டுக்குச் சென்ற நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர், அந்நாட்டு எல்லைக்குள்பட்ட அமேசான் வனப் பகுதியை வாங்க பழங்குடியினரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பொலிவியா நாட்டின் ’எல் டெபர்’ என்ற ஊடகத்தின் செய்தியை மேற்கோள்காட்டி, நித்தியானந்தா சீடர்கள் தொடர்பான செய்தியை நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் பொலிவியாவுக்குச் சென்ற நித்தியானந்தா சீடர்கள் 20 பேர், அந்நாட்டு அதிபர் லூயிஸ் ஆர்ஸுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

தொடர்ந்து, பெளரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர் பெட்ரோ குவாசிகோவை கடந்தாண்டு இறுதியில் கைலாசா பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாகவும் இலவச மருத்துவம் தருவதாகவும் வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும் ஆசைவார்த்தைக் கூறி, பெளரி பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனப்பகுதியை 1,000 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அவர்கள் ஒப்பந்தம் செய்த இடத்தின் பரப்பளவு தில்லியைவிட 3 மடங்கு பெரியதாம். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1.70 கோடி கொடுப்பதாக நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிவியா நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அந்நாட்டு அரசு விசாரணையைத் தொடங்கியது.

முதல்கட்டமாக கைலாசாவில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த 20 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும், 20 பேரையும் அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளனர்.

உலகின் நுரையீரலான அமேசான் வனப்பகுதி பழங்குடியினருக்கு சொந்தமானது என்றும் அப்பகுதிகளை யார் நினைத்தாலும் வாங்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா சீடர்கள் குறித்து பெளரி பழங்குடியினத் தலைவர் பெட்ரோ குவாசிகோ கூறுகையில், ”25 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்டனர், ஆனால், ஒப்பந்தத்தில் 1,000 ஆண்டுகள் என்றும், எங்கள் பகுதியில் உள்ள வான்வழித் தடங்கள், இயற்கை வளங்களை பயன்படுத்தவும் அனுமதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மேலும், அமேசான் வனப் பகுதியை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் மேற்கொண்ட விவகாரம் தொடர்பாக பொலிவியா அரசு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தா எங்கே?

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, ஹிந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட காணொலி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை யூடியூபில் நேரலையில் வந்த நித்தியானந்தா, தான் உயிருடன் மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஈக்வேடார் நாட்டில் உள்ள தனித் தீவில் கைலாசா நாட்டை நித்தியானந்தா அமைத்துள்ளதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது.

தற்போது பொலிவியாவில் கைலாசா நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவரது சீடர்கள் கைதாகியுள்ளனர்.

இப்போது இவர்கள் கைலாசா என்ற நாட்டைத்தான் உருவாக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்றால், உண்மையிலேயே பலரின் கனவாக இருக்கும் கைலாசா என்ற நாடு இதுவரை உருவாக்கப்படவேயில்லையா? பிறகு எங்கிருந்துகொண்டுதான் நாள்தோறும் நித்யானந்தா விடியோக்களை வெளியிட்டு வருகிறார்? எங்குதான் இருக்கிறார்? உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இதற்கும் நித்யானந்தா விரைவில் நேரலையில் தோன்றி விளக்கம் கொடுக்கலாம்.

விடியோ வெளியாகலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.