;
Athirady Tamil News

டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி

0

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதன் மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.இது குறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவதுசீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக, அந்த நாட்டுப் பொருள்கள் மீது சீனாவும் அதே விகிதத்தில் கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது.

வரும் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும்.

இது மட்டுமின்றி, டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பை எதிா்த்து உலக சுகாதார அமைப்பில் சீனா வழக்கு பதிவு செய்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு எதிா்வினையாக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி ராணுவ பயன்பாட்டிலும் ஈடுபடுத்தக்கூடிய பொருள்களை அமெரிக்காவின் 16 நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன வா்த்தகத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தடைவிதித்தது.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்ற அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதமும், சீன பொருள்கள் மீது 10 முதல் 15 சதவீதமும் அவா் கூடுதல் வரி விதித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தாா். இதனால் அமெரிக்காவுக்கு அதிக அளவில் இரும்பையும் அலுமினியத்தையும் ஏற்றுமதி செய்யும் கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால், அதன் தொடா்ச்சியாக அனைத்து நாடுகளில் இருந்தும இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு டிரம்ப் அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பால் ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்பை எதிா்நோக்கியுள்ளன.

Advertisement

இதற்கிடையே, பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாக டிரம்ப் கூறிவந்தாா். இந்த நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் வியாழக்கிழமை அதிகாலை அறிவித்தாா்.

அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை டிரம்ப் வெளியிட்டாா். அதன்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 54 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்தச் சூழலில், அமெரிக்காவின் அனைத்து பொருள்கள் மீதும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா தற்போது அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.