;
Athirady Tamil News

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணை வெறியாட்டம்: ஜெலென்ஸ்கி கடும் கண்டனம்!

0

உக்ரைனில் ரஷ்ய நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் ரஷ்யா நடத்திய கோரமான ஏவுகணை தாக்குதலில் 6 இளம் குழந்தைகள் உட்பட 14 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய உக்ரைன் நகரமான க்ரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பிராந்திய ஆளுநர் செர்ஹி லிசாக் வெளியிட்டுள்ள தகவலில், இந்த வெடிகுண்டு தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி கண்டனம்
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதற்கான தெளிவான மற்றும் கசப்பான சான்றாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ரஷ்யாவின் ஒவ்வொரு நாளும் தொடரும் தாக்குதல்கள் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறை நீடிப்பதற்கு ஒரே காரணம் ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பாததுதான். இது உலகத்துக்கே தெரியும்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

“ரஷ்யாவின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலமும், உக்ரைனின் விமான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், நமது இராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.