தர்பூசணி பழத்தில் ரசாயன ஊசி? அதிகாரிகள் விளக்கம்

கோடைக்காலத்தில் அதிகமாக மக்கள் வாங்கி சாப்பிடும் தர்பூசணி பழ சுவையை அதிகரிக்க ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தர்பூசணி
கோடை வெயிலை சமாளிக்க பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு மிக உதவியாக இருப்பது தர்பூசணி பழங்கள் தான்.
நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் இந்த பழத்தினைக் குறித்து சமீப காலமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ரசாயணங்களை ஊசி மூலம் செலுத்தி விற்கப்படுவதாக கூறப்படுவதுடன், பல கடைகளில் உள்ள பழங்களை உணவுக் கட்டுப்பாடு துறைகள் அழித்தும் வந்தனர்.
இதனால் இதன் விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், மக்கள் வாங்கி சாப்பிடவும் சற்று தயக்கத்தில் காணப்படுகின்றனர்.
வருந்தும் விவசாயிகள்
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பகுதியில் 370 ஹெக்டேரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகின்றது.
அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாலகுமார் விவசாய நிலத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இவர் கூறுகையில், நிறத்துக்காகவும், சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
தர்பூசணி பழத்தில் லைகோபின் என்ற மூலப்பொருள் தான் நிறத்தையும், சுவையையும் அளிக்கின்றது. இதனால் சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழத்தினை தயக்கமில்லாமல் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.