;
Athirady Tamil News

உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷியா தாக்குதல்! 18 பேர் பலி!

0

உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மத்திய மாகாணத்திலுள்ள அதிபர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவியி ரிஹ் மீது நேற்று முன்தினம் (ஏப்.4) ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நகரத்தின் குடியிருப்புப் பகுதிகளின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வெளியான விடியோக்களில் 10 அடுக்கு குடியிருப்பு கட்டடம் முற்றிலும் தகர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளது பதிவாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில் க்ரிவியி ரிஹ் நகரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் மிகவும் பயங்கரமானது என குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அந்த நகரத்தின் உணவகத்தில் ஆலோசனை மேற்கொண்டிருந்த உக்ரைன் அதிகாரிகள் மற்றும் அவர்களை வழிநடத்தும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து அதி நவீன ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை முற்றிலும் மறுத்துள்ள உக்ரைன் ராணுவம் ரஷியா பலி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று அவர்கள் செய்த குற்றத்தை மறைக்க பொய்யான தகவல்களை பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அம்மாகாணத் தலைவர் செர்ஹி லியசக் கூறுகையில், இந்தத் தாக்குதலில் 3 மாதக் குழந்தை உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று மாலை அந்நகரம் முழுவதும் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்து பலியானதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் பற்றி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அதிபர் ஸெலெலன்ஸ்கி கூறுகையில், இந்தப் போர் தொடரும் ஒரே காரணம் ரஷியாவுக்கு போர்நிறுத்ததில் உடன்பாடு இல்லாததுதான் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்காக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் (ஏப்.4) அதிபர் ஸெலென்ஸ்கியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.