;
Athirady Tamil News

இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்த வீடியோ! 15 மனிதாபிமான ஊழியர்கள் படுகொலை அம்பலம்

0

காசாவில் மனிதாபிமான தொண்டு பணிகளை மேற்கொண்டு வந்த ஊழியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதல் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமான ஊழியர்கள் மீது இஸ்ரேல் அத்துமீறல்
காசா மக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வந்த அப்பாவி ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி, காசாவில் உள்ள ராஃபா நகரில் மனிதாபிமான உதவிக் குழுவினர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூரமான தாக்குதலில் பாலஸ்தீன சிவப்பிறை சங்கம் (Palestinian Red Crescent Society) எனப்படும் ரெட் கிரசண்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டு தன்னார்வலர்கள், பாதுகாப்பு அவசரப் பிரிவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் (UNRWA) ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பட்டினி மற்றும் நோயால் வாடும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக களத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் உதவி பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்தும் இஸ்ரேல் வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்த வீடியோ
ஆரம்பத்தில், இஸ்ரேல் தரப்பில், சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் ராணுவ வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது தவறுதலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த வெறித்தனமான தாக்குதல் நடந்த அன்று, உயிரிழந்த மனிதாபிமான உதவிக்குழு ஊழியர்களில் ஒருவரான பாலஸ்தீனியரின் கைப்பேசியிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், மனிதாபிமான ஊழியர்கள் பயணித்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை குறிக்கும் பிரகாசமான சிவப்பு விளக்குகள் எரிந்த நிலையில் தெளிவாகத் தெரிகின்றன.

இருந்தபோதிலும், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அந்த வாகனங்களை குறிவைத்தும், வாகனங்களில் இருந்து வெளியேற முயன்ற உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொடூரமான காட்சிகள் அந்த வீடியோவில் துல்லியமாக பதிவாகியுள்ளன.

இந்த வீடியோ ஆதாரத்தின் மூலம், இஸ்ரேல் திட்டமிட்டு, வேண்டுமென்றே மனிதாபிமான உதவி பணியில் ஈடுபட்டிருந்த 15 அப்பாவி ஊழியர்களையும் படுகொலை செய்தது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.