;
Athirady Tamil News

அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு

0

அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள அடிப்படை 10 சதவீத பரஸ்பர வரியை அதிகாரிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.31 மணி) இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கக் கிடங்குகள் ஆகியவற்றில் புதிய பரஸ்பர வரி வசூலிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையே, டிரம்ப்பின் இந்த வரி விதிப்புக்கு எதிா்வினையாற்றுவது குறித்து பிற நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசிக்க பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் முடிவு செய்துள்ளாா். ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனேசி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மேலோனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதற்குப் பிறகு அவா் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்கள் மீதும் வரும் 10-ஆம் தேதி முதல் 34 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா்

அதன் ஒரு பகுதியாக, கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதமும், சீன பொருள்கள் மீது 10 முதல் 15 சதவீதமும் அவா் கூடுதல் வரி விதித்தாா். அத்துடன், உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்த அவா், அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு மேலும் 25 சதவீத கூடுதல் வரி விதித்தாா்.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.