தெலங்கானாவில் 86 மாவோயிஸ்ட்கள் சரண்: பொதுமன்னிப்புடன் தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி

தெலங்கானா மாநிலத்தில் நேற்று 86 மாவோயிஸ்ட்கள் போலீஸில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு உடனடி நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அடிக்கடி இந்த மாவட்டங்களில் ஆயுதப்படை போலீஸார் வனப்பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீஸார் மாவோயிஸ்ட்களுடன் தீவிர துப்பாக்கி சூட்டிலும் ஈடுபடுகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டாலும், சமீபகாலமாக அதிக அளவில் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 86 மாவோயிஸ்ட்கள் தெலங்கானா மாநில பத்ராத்ரி கொத்தகூடம் போலீஸ் நிலையத்தில், ஐஜி சந்திரசேகர ரெட்டி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
சரண் அடைந்தவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் மீது தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரண் அடைந்தவர்களில் 66 பேர் ஆண்கள், 20 பேர் பெண் மாவோயிஸ்ட்கள் ஆவர்.
தெலங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தபடி, சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு ஏற்றவாறு, 5 ஏக்கர் விவசாய நிலம், பசு மாடுகள், ஆடு, கோழி போன்றவை வளர்க்க அரசு நிதி உதவி வழங்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு உடனடி உதவியாக 86 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.