ம.பி.யில் இதய அறுவை சிகிச்சைகள் செய்த போலி மருத்துவர் சிக்கினார்: ஒரே மாதத்தில் 7 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைகள் செய்து, ஒரே மாதத்தில் 7 பேரை கொன்ற போலி மருத்துவர் சிக்கினார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் என் ஜான் கெம். இவரது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, நரேந்திர விக்ரமாதித்திய யாதவ் என்பவர் டாமோ நகரில் உள்ள கிறிஸ்டியன் மிஷனரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியுள்ளார். இதய நோயாளிகள் பலருக்கு இவர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். ஒரே மாதத்தில் இவரிடம் அறுவை சிகிச்சை செய்த 7 பேர் இறந்தது இவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீபக் திவாரி என்ற வழக்கறிஞர் டாமோ மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.
தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் என் ஜான் கெம் என்ற உண்மையான இதய அறுவை சிகிச்சை நிபுணர் இங்கிலாந்தில் பணியாற்றுகிறார் என்பது தெரிந்தது. அவரது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து நரேந்திர விக்ரமாதித்தியா யாதவ் என்பவர் போலி மருத்துவராக பணியாற்றியுள்ளார். இவரது ஆவணங்களை எல்லாம் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட விசாரணைக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
போலி மருத்துவர் நரேந்திர விக்ரமாதித்தியா யாதவிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என வழக்கறிஞர் தீபக் திவாரி கூறியுள்ளார். ஹைதராபாத்திலும் விக்ரமாதித்தியா யாதவ் மீது மோசடி வழக்கு உள்ளது.
.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பிரியங் கனூங்கோ கூறுகையில், ‘‘ டாமோ மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டியன் மிஷனரி மருத்துவமனை மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு பணத்தை பெற்று வருகிறது. இங்கு போலி மருத்துவர் இதய அறுவை சிகிச்சை செய்ததாக புகார்களை பெற்றுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
விசாரணை முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக டாமோ மாவட்ட ஆட்சியர் சுதீர் கோச்சார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நடைபெற்ற மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாமோ எஸ்.பி அபிஷேக் திவாரி கூறியுள்ளார். போலி மருத்துவர் நரேந்திர விக்ரமாதித்தியா யாதவ், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இருப்பது போன்ற போலி படத்தை தயார் செய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு, அவரது நடவடிக்கைகளை பாராட்டும் நபராக இருந்துள்ளார்.