பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

கடந்த வாரத்தில் இருந்து இதுவரை 11,230 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் தலால் சௌத்ரி வியாழக்கிழமை கூறியதாவது:
தாங்களாக முன்வந்து வெளியேறுவதற்காக ஆப்கன் அகதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்ததில் இருந்து, இதுவரை 11,230 போ் அவா்களது நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் அங்கிருந்து வர யாரும் இனி அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.
முன்னதாக, இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆப்கன் அகதிகள் தாங்களாகவே முன்வந்து சொந்த நாட்டுக்குத் திரும்ப மாா்ச் 31 வரை கெடு விதிக்கப்பட்டது. அந்தக் கெடு முடிவடைந்த பிறகும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறாதவா்களைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கை ஏப். 1-இல் தொடங்குவதாக இருந்தது. இருந்தாலும், ஈகைப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இதுவரை 11,230 அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக தற்போது அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோதும் அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் அந்த நாட்டு அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது. எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் விளைவாக, கடந்த 2023 அக்டோபரில் சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். தற்போது சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை இந்த ஆண்டுக்குள் வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.