ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்!

ரஷியாவுடனான போரில் எதிர்த்து போராடுவதற்காக உக்ரைனுக்கு மேலும் உதவிபுரியவிருப்பதாக பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன.
ரஷியா – உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ரஷியா ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும்நிலையில், அதற்கேற்றாற்போல ரஷியாவின் நடவடிக்கையும் இருந்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பான வாஷிங்டன் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள ரஷியா தாமதப்படுத்தி வரும் அதேவேளையில், உக்ரைனில் ரஷியாவின் போர் நடவடிக்கை வேகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ தலைமையகத்தில், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது “உக்ரைன் நாட்டின் வான்வெளி பாதுகாப்பது என்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. ரஷியாவின் ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து,
உக்ரைன் மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓர் அரசியல்சார்ந்த முடிவு தேவைப்படுகிறது’’ என்று கூறினார்.
அதற்கு முன்னதாக, தனது சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியதாவது, உக்ரைனுக்கு ஏவுகணை அமைப்புகள் போன்ற போதுமான நவீன அமைப்புகள் தேவை. ரஷியாவின் ஏவுகணைகளுக்கு எதிராக போதுமான செயல்திறன் கொண்ட, குறைந்தபட்சம் 10 அமைப்புகள் உக்ரைனுக்கு தேவை என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு போதுமான ஏவுகணைகளை வழங்க ஜெர்மனி முன்வருவதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, ஹாக்கி வான் பாதுகாப்பு அமைப்பை வழங்க, நெதர்லாந்து உறுதி கூறியுள்ளது.
உலக ஆயுத சந்தையை கண்காணித்து வரும் எஸ்தோனியா, உக்ரைன் ஆதரவாளர்கள் அதிக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் எஸ்தோனியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்குர் கூறினார்.