மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வோருக்கு ரூ. 25.8 கோடி பரிசு: நாசா அறிவிப்பு!

விண்வெளி வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
நிலாவில் நீண்டகாலம் தங்கி, ஆய்வு மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா முயற்சி செய்து வருகிறது. மேலும், ஆய்வு மேற்கொள்ளும் காலகட்டத்தில், விண்வெளி வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
நிலாவில் 1969 முதல் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான விண்வெளி பயணம் மேற்கொண்டவர்களின் மனிதக் கழிவுகள், நிலவின் மேற்பரப்பைத் தொடாமல், அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்வெளி வீரர்களின் மலம், சிறுநீர், வாந்தி உள்ளிட்ட மனிதக் கழிவுகள், 96 பைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
இந்த நிலையில், இவ்வாறான மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவற்றை நீர், ஆற்றல் அல்லது உரம் போன்ற பயன்படுத்தக்கூடிய வளங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், விண்வெளியில் ஏற்படுத்தப்படும் கழிவுகள் குறைவாகவோ அல்லது பூமிக்கே திருப்பிக் கொண்டுவரத் தேவையில்லை.
இந்த மறுசுழற்சி திட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. மேலும், உருவாக்குபவர்களுக்கு 3 மில்லியன் டாலர் (ரூ. 25.8 கோடி) பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களிலும் பயன்படுத்தும்வகையில், புதிய கண்டுபிடிப்பு இருக்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது.