காஸாவிலுள்ள மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் அந்நகரத்தின் கிழக்குப் பகுதிகளிலுள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவத்தின் அரேபிய செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது, உங்கள் பகுதியிலுள்ள தீவிரவாத கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக காஸாவின் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி மேற்கு பகுதிகளிலுள்ள முகாம்களுக்கு இடம்பெயர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஃபாவிலுள்ள டெல் அல்-சுல்தான் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் அஹமத் இல்யாத் முஹம்மது ஃபர்ஹாத் என்பவரை தங்களது படையினர் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஸா நகரத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஏப்.10) முதல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.