பேரணியில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு! இளைஞர் பலி…வலுக்கும் மக்கள் போராட்டம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டக்காரர்களின் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தின் வாத் நகரத்தில் கடந்த ஏப்.9 ஆம் தேதியன்று பலூச் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்களின் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இணாயத்துல்லா என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.11) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலூசிஸ்தானின் உள்ளூர் பத்திரிகையில் வெளியான செய்தியில், அமைதியான முறையில் நடைபெற்ற மக்கள் பேரணியின் மீது பாகிஸ்தான் அரசு நிகழ்த்திய வன்முறையினால் இணயத்துல்லா என்ற இளைஞர் பலியாகியதாகவும் இந்த மரணத்தினால் அரசின் நடவடிக்கைகள் மீதான மக்களின் விமர்சனம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பலூச் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியானதுடன் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த உயிர் பலிகளுடன் தற்போது வாத் நகரத்தில் நிகழ்ந்த இளைஞரின் மரணத்தினால் பலூசிஸ்தானில் நடைபெறும் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வாஷுக் நகரத்தில் மஹ்ராங் பலூச் உள்ளிட்ட முக்கிய பலூச் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.