உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமாா் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன் பாதுகாப்பு தொடா்புக் குழு’ மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள், பயிற்சி மற்றும் பிற உதவிகளை ஒருங்கிணைக்க இந்தக் குழு மாதந்தோறும் கூடுகிறது.
இந்தக் குழுவில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதா்லாந்து, பெல்ஜியம், டென்மாா்க், நாா்வே, ஸ்வீடன், பின்லாந்து, போலந்து, துருக்கி, உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து போன்ற பிற நாடுகள் உள்பட 57 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் பங்கு வகிக்கின்றன.