;
Athirady Tamil News

ஆயுர்வேத மருத்துவர் என ஏமாற்றி பிரசவம் பார்த்த பெண்: கர்ப்பிணி பலியானதால் சிக்கல்

0

தன்னை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என சொல்லிக்கொண்டு ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த ஒரு பெண், பிரசவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து தலைமறைவானார்.

பிரசவத்தில் உயிரிழந்த பெண்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் கிளினிக் ஒன்றைத் துவங்கிய பெண்ணொருவர், தன்னை ஆயுர்வேத மருத்துவர் என கூறிக்கொண்டு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளித்துவந்துள்ளார்.

ஒரு பெண் வயிற்று வலி என வரவே, அவருக்கு மருந்துகள் கொடுத்துள்ளார் இந்த போலி மருத்துவர்.

ஆனால், அந்தப் பெண்ணின் வலி அதிகமாகியுள்ளது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அந்த போலி மருத்துவர்.

அந்தப் பெண்ணின் நிலைமை மோசமாகவே, அவர் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூற, போலி மருத்துவர் பொலிசில் சிக்கிக்கொண்டார்.

தலைமறைவு
2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்தப் பெண், 2015இல் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தலைமறைவாகிவிட்டார்.

தன் குடும்பத்துடனான உறவை துண்டித்துக்கொண்டு அவர் எங்கிருக்கிறார் என யாருக்கும் தெரியாமலிருந்த நிலையில், அவர் மீண்டும் புதுடெல்லிக்கு வந்துள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் சிக்கியபோது…

அதன்படி அந்தப் பெண்ணைத் தேடிச் சென்ற பொலிசார், அவர் மீண்டும் செவிலியர் என பொய் சொல்லி வேலை செய்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அந்தப் பெண்ணை துரத்திப் பிடித்து கைது செய்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், கிளினிக் ஒன்றில் உதவியாளராக ஒரு வருடம் வேலை பார்த்துவந்த அந்தப் பெண், கொஞ்சம் சிகிச்சைமுறைகளைக் கற்றுக்கொண்டதும், பணம் கொடுத்து ’ஆயுர்வேத மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்’ என போலிச் சான்றிதழ் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அந்தப் பெண், செவ்வாய்க்கிழமையன்று பொலிசில் சிக்கியுள்ளார். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.