தூசு புயல்! 200 விமானங்கள் தாமதம், தில்லி விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

புது தில்லி: தூசு புயலால் புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தில்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) மோசமான வானிலை நிலவியது. தூசு புயலும், பலத்த காற்றுடன் இடி, மின்னலும் வெட்டியதால் தில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு
மோசமான வானிலையால் 50 உள்நாட்டு விமானங்கள், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றடைந்தன. வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை காலை வரை, பல்வேறு விமான நிறுவனங்களும் விமானங்களை குறித்த நேரத்தில் இயக்க இயலாததால் விமான சேவை தற்காலிகமாக முடங்கியது.
25-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு இடத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. தில்லியிலிருந்து புறப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான சேவையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பயணிகள் கூட்டம் அதிகளவில் திரண்டிருந்ததால், கூட்ட நெரிசலால் மிகுந்த சிரமப்பட்டனர்.
தில்லிக்கு 205 விமானங்கள் வெள்ளிக்கிழமை தாமதமாக வந்தடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிகிறது.