ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை! உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுமா?

ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருப்பதைத் தொடர்ந்து உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு பிரதிநிதியாக மாஸ்கோ சென்றுள்ள ஸ்டீவ் விட்காஃப் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து பேசினார். சுமார் 4 மணி நேரத்தும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ஆலொசிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள ரஷியாவிடம் அமெரிக்கா அழுத்தமாக வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும், உக்ரைன் போருக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ரஷியா உறுதியாக இருப்பதை பேச்சுவார்த்தையின் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. (அமெரிக்கா உள்ளடங்கிய ஐரோப்பிய நாடுகள் பல ஒருங்கிணைந்துள்ள ‘நேட்டோ’ அமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் உறுப்பினராக இணைய கூடாது என்பதே ரஷியாவின் முதன்மை நிபந்தனையாகும்.)
உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்காவின் தலைமைப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இன்னொருபுறம், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன் பாதுகாப்பு தொடா்புக் குழு’ மாநாட்டில் ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமாா் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனில் நீடிக்கும் சண்டை விரைவில் முடிவுக்கு வருமா என்பது தெளிவாகவில்லை.