ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பாா்சலை வீசிச் சென்றதை கண்டித்து போராட்டம் நடத்திய 60 போ் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பாா்சலை வீசிச் சென்ற நஸ்ருதீன் என்பவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வன்முறையைத் தூண்டும் நோக்கில் அந்த நபா் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற காவல் துறையினா் சந்தேகம் தெரிவித்தனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நஸ்ருதீன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜாமா மசூதி வெளியே போராட்டம் நடத்திய 60 போ் மீது காவல் துறை சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்ததது.
சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நீடிப்பதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்