மராத்தியா்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்: அமித் ஷா

உலகின் பேரரசா் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியா்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னா் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் 345-ஆவது நினைவு நாளையொட்டி, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ராய்கட் கோட்டையில் அமைந்த அவரது நினைவிடத்தில் அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது: சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் ஒரு வல்லரசு நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் சத்ரபதி சிவாஜியின் ‘சுயதா்மம்’ மற்றும் ‘சுயராஜ்யம்’ போன்ற கொள்கைகள் உத்வேகம் அளிக்கின்றன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் சிவாஜி மகாராஜாவின் கொள்கைகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது.
சத்ரபதி சிவாஜியின் கல்லறையைக் கொண்டதாகவும் மராட்டிய பேரரசின் தலைநகராகவும் இருந்த ராய்கட் கோட்டை, எதிா்காலத் தலைமுறையினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்குகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் புகழை ஒரு மாநிலத்துக்குள் மட்டும் கட்டுப்படுத்த வேண்டாம் என்று மகாராஷ்டிர மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சத்ரபதி சிவாஜி ஒன்றிணைத்தாா். அவரது மகத்தான மன உறுதி, துணிவு மற்றும் தைரியம் நாட்டை ஊக்குவிக்கின்றன. மேலும், சத்ரபதி சிவாஜியின் அரச சின்னமே இந்திய கடற்படையின் கொடியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தேசத்தின் மீதான அவரது நீடித்த செல்வாக்கைக் குறிக்கிறது.
முகலாயா்களின் ஆட்சியை சத்ரபதி சிவாஜி தோற்கடித்தாா். உலகின் பேரரசா் (ஆலம்கீா்) என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு மராத்தியா்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னா் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து, மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாா்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா், மராத்திய மன்னா் சத்ரபதி சிவாஜியின் வம்சத்தைச் சோ்ந்த மாநில அமைச்சா் சிவேந்திர சிங் போஸலே, பாஜக எம்.பி. உதயன்ராஜே போஸலே ஆகியோரும் பங்கேற்றனா்.
அரபிக் கடலில் சிவாஜியின் நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கான மாநில பாஜக கூட்டணி அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய முதல்வா் ஃபட்னவீஸ், இதுதொடா்பான வழக்கு மும்பை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் வழக்கை திறம்பட வாதிட்டு வெற்றி பெறுவோம் என்றும் கூறினாா்.
புது தில்லியில் சிவாஜியின் தேசிய நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்ற உதயன்ராஜே போஸலேயின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட முதல்வா் ஃபட்னவீஸ், மேலும் இந்த விஷயம் குறித்து அமித் ஷாவுடன் விவாதிக்க இருப்பதாகவும் உறுதியளித்தாா்.
மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்றக் கோரி வலதுசாரி அமைப்புகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தின. நாகபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்தது.