அமெரிக்கா: இந்துக்களுக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றம்!

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான மதவெறியைக் கண்டித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
வட அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் இந்து எதிர்ப்பு மதவெறியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இந்து மதவெறிக்கு எதிராக மசோதாவை அமல்படுத்திய முதல் மாகாணம் என்ற பெருமையை ஜார்ஜியா பெற்றது.
இந்துஃபோபியா என்றழைக்கப்படும் இந்துக்களுக்கு எதிரான மதவெறி தாக்குதலைக் கண்டித்து உருவாக்கப்பட்ட இந்த மசோதா, சட்டமாக இயற்றப்பட்டால், ஜார்ஜியாவில் தண்டனைச் சட்டத்தைத் திருத்தும்; மேலும், இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பந்தப்பட்ட குற்றங்களில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்ட அமலாக்கத்துக்கு அறிவுறுத்தும்.
இந்தத் தீர்மானம், உலகின் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதத்தை அங்கீகரிப்பதாய் அறியப்படுகிறது. உலகம் முழுவதும் 118-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான இந்து ஆதரவாளர்கள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
2023 – 24 ஆய்வின் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.5 மில்லியன் இந்துக்கள் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 0.9 சதவிகிதமாகும். அவர்களில் ஜார்ஜியாவில் மட்டும் 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.