திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!

கீழ்பென்னாத்தூர் அருகே இன்று அதிகாலை காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
லாரி உரிமையாளர்கள் 4 பேர் புதுச்சேரியில் இருந்து சொந்த வேலைக் காரணமாக பெங்களூரு சென்று, அங்கு பணி முடித்துக் கொண்டு மீண்டும் இன்று(ஏப். 13) அதிகாலை திருவண்ணாமலை வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ. காட்டுக்குளம் பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்டாலின், சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரோப் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.