அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வா்த்தகம் 3% அளவில் சுருங்கும்!

‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வா்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது’ என்று ஐ.நா.வின் உயா் பொருளாதார நிபுணா் தெரிவித்துள்ளாா்.
இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்தியா உள்பட 25 நாடுகள் மீது கடந்த 3-ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தாா். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரியை அறிவித்தாா். சீன பொருள்கள் மீது 34 சதவீத வரியை அறிவித்தாா். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பை சீனா அறிவித்தது. இதனால், சீன பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா மீண்டும் உயா்த்தியது. அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் தற்போது விதித்துள்ளன. இதன் காரணமாக, உலக அளவில் வா்த்தகப் போா் உருவாகும் நிலை எழுந்ததுடன், சா்வதேச பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்தச் சூழலில், சீனாவைத் தவிர, மற்ற நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும்; அதே நேரம், அனைத்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், உலகளாவிய வா்த்தகம் பெரிய அளவில் சுருங்க வாய்ப்புள்ளதோடு, ஏற்றுமதி சந்தையில் மாற்றமும் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் ஐ.நா. சா்வதேச வா்த்தக மைய செயல் இயக்குநா் பமேலா கோக்-ஹாமில்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, வா்த்தக கூட்டுறவு நாடுகள், பொருளாதார ஒருங்கிணைப்புகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க நீண்ட கால மாற்றம் ஏற்படும் என்பதோடு, உலகளாவிய வா்த்தகம் 3 சதவீத அளவுக்கு சுருங்கவும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மெக்சிகோ ஏற்றுமதியாளா்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனா். இதன் காரணமாக, அவா்கள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய சந்தைகளிலிருந்து, கனடா, பிரேஸில் மற்றும் இந்திய சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது.
அதுபோல, வியத்நாமின் ஏற்றுமதிகள் அமெரிக்கா, மெக்சிகோ, சீனா சந்தைகளிலிருந்து மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது.
வளா்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான முதன்மை நிறுவனங்களாக ஜவுளித் துறை விளங்குகிறது. இத் துறையில் வங்கதேசம் உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக உள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டின் மீது அமெரிக்கா 37 சதவீத பரஸ்பர வரியை விதித்திருப்பது, அமெரிக்காவுக்கான அந் நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். அதாவது, வரும் 2029-இல் அமெரிக்காவுக்கான வருடாந்திர ஜவுளி ஏற்றுமதியில் ரூ. 28,411 கோடி அளவுக்கு வங்கதேசம் இழப்பை சந்திக்க நேரிடும்.
இதுபோல, வளா்ந்து வரும் பிற நாடுகளும் பாதிப்பைச் சந்திக்கும். எனவே, வளா்ந்த நாடுகள் நிச்சயமற்ற சூழலை சந்திக்கும் என்பதோடு, நீண்ட காலத்துக்கு மாற்று சந்தை வாய்ப்புகளை சாா்ந்திருக்க வேண்டிய சூழலும் உருவாகும்.
அதுபோல, சீன பொருள்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருள்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதித்திருப்பது, உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளிடையேயான அனைத்து பொருள்கள் வா்த்தகத்தையும் கிட்டத்தட்ட நிறுத்தும் நிலையை உருவாக்கும். ஆனால், மோசமடைந்து வரும் சூழலை மீட்டெப்பதற்கான நடவடிக்கையை இரு நாடுகளும் ஒரு கட்டத்தில் மேற்கொள்ளும் என்றாா்.