மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகாகவும், அடுத்தது 6.4 அலகாகவும் பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 3,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 5,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மண்டலாய் மற்றும் நேபிடாவுக்கு இடையே உள்ள மீக்டிலாவில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
மியான்மருக்கு தெற்கே 97 கி.மீ. தொலைவில் உள்ள வுண்ட்வின் பகுதியில் 20 கி.மீ. ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக மியான்மா் வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் இந்தப் பகுதியில் 7.7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
மியான்மரில் நிலவி வரும் உள்நாட்டு போரால் 30 லட்சம் போ் இடம்பெயா்ந்த சூழலில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் மனிதநேய பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும் என ஐ.நா. கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மியான்மா் புத்தாண்டை (திங்யான்) கொண்டாடுவதற்காக மூன்று நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் முதல்நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுநிகழ்ச்சிகள் ரத்து ரத்து செய்யப்பட்டன.