புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர் மகளின் திருமணத்தில் தாய் மாமனாகி வாக்குறுதி நிறைவேற்றிய ஓம் பிர்லா

வாக்குறுதி அளித்தபடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவரின் மகள் திருமணத்தில் தாய்மாமனாக பங்கேற்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா பரிசுகளை வழங்கினார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் சங்கோட் கிராமத்தைச் சேர்ந்த ஹேம்ராஜும் ஒருவர். இதையடுத்து, கோட்டா தொகுதி மக்களவை உறுப்பினரும் மக்களவைத் தலைவருமான ஓம் பிர்லா ஹேம்ராஜின் மனைவி மதுபாலா, மகள் ரீனா மீனா உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ரீனாவின் திருமணத்தில் தாய்மானாக இருந்து சீர்வரிசை வழங்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன் பிறகு ஆண்டுதோறும் ரக்சா பந்தன் நாளில் ஹேம்ராஜ் வீட்டுக்கு ஓம் பிர்லா சென்று வந்தார்.
இந்நிலையில், ரீனா மீனாவின் திருமணம் இந்து முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓம் பிர்லா, தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து சடங்குகளை நிறைவேற்றியதுடன் சீர்வரிசைகளையும் வழங்கினார். இதன்மூலம் 6 ஆண்டுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியை பிர்லா நிறைவேற்றி உள்ளார். இவ்விழாவில் மாநில எரிசக்தித் துறை அமைச்சர் ஹீராலால் நாகரும் உடன் இருந்தார்.