சிங்கப்பூா் பொதுத் தோ்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு: பிரதமா் வோங்

சிங்கப்பூா்: சிங்கப்பூா் பொதுத் தோ்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சாா்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமா் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சிங்கப்பூா் பொதுத் தோ்தல் விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் லாரன்ஸ் வோங் இவ்வாறு கூறியுள்ளாா்.
சிங்கப்பூரில் ‘வாங்க இப்போ பேசலாம் அரட்டை’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதமா் லாரன்ஸ் வோங் மற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறையின் அமைச்சா் ஜனில் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது, இந்திய சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்களுடனான உரையாடலில் பிரதமா் வோங் கூறியதாவது: சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாட்டுக்கு அதன் பங்களிப்பு பெரியது. சிங்கப்பூரின் உணா்வை நீங்கள் வெளிப்படுத்துகிறீா்கள்.
சிங்கப்பூரில் உள்ள இந்தியா்கள் வணிகம், தொழில் மற்றும் பொதுச் சேவைகள் உள்பட பல துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனா். இந்த அபரிமிதமான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், எதிா்வரும் பொதுத் தோ்தலில் நிச்சயமாக இந்திய சமூகத்தினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தாா்.
2020-பொதுத் தோ்தலில் பிஏபி 83 இடங்களை வென்றது. இருப்பினும், கட்சியின் 27 புது முகங்களில் இந்திய வேட்பாளா்கள் இடம்பெறவில்லை. இது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விகளை எழுப்பியது. 2024-ஆம் ஆண்டு தரவுகளின்படி, சிங்கப்பூா் மக்கள்தொகையில் இந்தியா்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனா்கள் 75.6 சதவீதமும் உள்ளனா்.