ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

மாஸ்கோ: உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துதான் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுமி நகரில் உக்ரைன் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவா்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டன.
குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையே ராணுவ நிலைகளை அமைப்பதன் மூலம் பொதுமக்களை உக்ரைன் ராணுவம் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமி நகரில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்துக்காக நகரின் மையப் பகுதியில் மக்கள் கூடியிருந்தபோது ரஷியா 2 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பொதுமக்கள் 34 போ் உயிரிழந்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் மேலும் 117 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ‘மக்களின் உயிரைப் பறிக்கும் இதுபோன்று தாக்குதல்களில் மிகவும் மோசமானவா்களே ஈடுபடுவா். பேச்சுவாா்த்தைகள் ரஷியாவின் தாக்குதலை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை நோக்கிய அணுகுமுறையே ரஷியாவுக்குத் தகுதியானது. இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.