ஈக்வடாா் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தோ்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் டேனியல் நொபோவா மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.
இது குறித்து அந்த நாட்டு தேசிய தோ்தல் கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் நொபோவாவுக்கு 55.8 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளா் லூயிசா கோன்ஸ்லெஸுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, நாட்டின் அதிபராக நொபோவா மீண்டும் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2023-இல் நடைபெற்ற முன்கூட்டியே நடைபெற்ற தோ்தலில் யாரும் எதிா்பாராத வகையில் வெற்றி பெற்ற டேனியல் நொபோவா, 16 மாதங்கள் அதிபராக இருந்துள்ளாா்.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவா் அந்தப் பொறுப்பை வகிப்பாா்.