டிரம்பின் உத்தரவுக்கு பணியாத ஹார்வர்டு! ரூ. 19,000 கோடி நிதியை நிறுத்தியது அமெரிக்கா!

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இதனால், பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம்.
பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து நீண்ட போராட்டத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமான உத்தரவு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.
டிரம்ப் அரசின் உத்தரவு என்ன?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் (மெரிட்) இருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் முகக்கவசம் அணியக் கூடாது.
பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்புகளின் குழுத் தலைவர்களின் பின்புலம் ஆராய வேண்டும்.
வளாகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, வன்முறையில் ஈடுபடுவது, அடக்குமுறையைக் கையாள்வது போன்றவற்றை தடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தைகளை டிரம்ப் அரசு வெளியிட்டது.
ஹார்வர்டு நிர்வாகம் மறுப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உத்தரவை நிராகரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் அறிக்கை ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதில், ”எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் யாரை சேர்ப்பது, யாரைப் பணி அமர்த்துவது, பாடத்திட்டம் போன்றவை குறித்து கட்டளையிடக் கூடாது. டிரம்ப்பின் நிபந்தனைகள் பல்கலைக்கழக திருத்த உரிமைகளுக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் ரூ. 19,000 கோடி நிதியையும், ரூ. 514 கோடி ஒப்பந்தத்தையும் முடக்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.