;
Athirady Tamil News

கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா

0

பெய்ஜிங்: இந்திய யாத்ரிகா்களுக்காக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை வரும் கோடைகாலத்தில் மீண்டும் தொடங்க இரு தரப்புக்கும் இடையே முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

கைலாஷ் -மானசரோவா் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான கைலாய மலை மற்றும் மானசரோவா் ஏரி, சீன கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட கிழக்கு லடாக் மோதலால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் யாத்திரை நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டு முதல் யாத்திரையை மீண்டும் தொடங்க சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்குவதென முடிவானது.

உத்தரகண்ட்- திபெத் இடையிலான லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 5 குழுக்களும், சிக்கிம்-திபெத் இடையிலான நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 10 குழுக்களும் அனுமதிக்கப்பட உள்ளன. கணினி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையில் யாத்ரிகா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன், ‘கைலாஷ்- மானசரோவா் யாத்திரை இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் மக்கள் பரிமாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். ஹிந்து மற்றும் பௌத்த மதத்தினரின் புனித தலங்களாக கைலாய மலை மற்றும் மானசரோவா் ஏரி உள்ளன.

இரு தரப்பும் ஒப்புக்கொண்டதன்படி, நடப்பாண்டு கோடைகாலம் முதல் புனித யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு இந்திய-சீன ராஜீய உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இரு தரப்பு உறவுகளின் உறுதியான மற்றும் நிலையான வளா்ச்சியை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.